சென்னையில் வசித்து வரும் அமெரிக்கரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற கும்பல்
சென்னை வெட்டுவாங்கேனி பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அமெரிக்க நாட்டை சேர்ந்த, இசை ஆசிரியரை கட்டிபோட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் பள்ளியில், பணியாற்றி வருபவர் கேரி ஸ்டூவர்ட். அவரும் அவரது பெண் தோழியும் வீட்டிலிருந்தபோது, அதிகாலை நேரத்தில் சிலர் கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்த கேரியை, 4 பேர் கொண்ட கும்பல் மடக்கி பிடித்து கட்டிப்போட்டுள்ளது.
இதைகண்ட கேரியின் தோழி அறையை தாளிட்டு உள்ளே இருந்தாவறே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதை கவனிக்காத அந்த கும்பல் வீட்டில் பணம் கிடைக்குமா என தேடியுள்ளது. மேலும், கிவ் கோல்ட், கிவ் கரன்சி என தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவரை மிரட்டியுள்ளனர். ஆனால், அது புரியாமல் கேரி முழித்துள்ளார்.
இதையடுத்து அவரிடமிருந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், அவரது இன்னோவா காரையும் வீட்டிலிருந்த வெளிநாட்டு துணிகளையும் திருடி செல்ல திட்டமிட்டுள்ளனர். கொள்ளையர்கள் துணிகளை காரில் அடுக்கி கொண்டிருந்தபோது, சரியாக போலீசார் அங்கு வந்துள்ளனர்.
இதை எதிர்பார்க்காத கொள்ளையர்கள் உடனடியாக வீட்டின் பின்புற வாயிலாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய போலீசார், தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
Comments