TNPSC முறைகேடு: இடைத்தரகர், டிஎன்பிஎஸ்சி ஊழியரை 6 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

0 935

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனை 6 நாள்கள் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகிய 2 பேரையும் குரூப் 2 ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளிலும் சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீசாரின் காவலில் தங்களை அனுமதிக்கக் கூடாதென்று இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குரூப்-4 முறைகேட்டில் காவலில் எடுத்து விசாரிக்கும் போது கண்களை கட்டி மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும், துப்பாக்கிகளை காட்டி என்கவுண்டர் செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் இருவரும் குற்றம் சாட்டினர்.

இதனைக் கேட்ட நீதிமன்றம், சிபிசிஐடி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தேர்வு முறைகேடு குறித்த ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இருவரையும் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்தது.

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் 26 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் அதில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டுபிடிக்கும் வகையில், ஜெயக்குமாரையும், ஓம் காந்தனையும் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments