குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான கலந்தாய்வு தொடக்கம்

0 2172

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமனக் கலந்தாய்வு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.   

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவை அலுவலர் உட்பட 9,882 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. 2019 நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதனிடையே குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட டி.என்.பி.எஸ்.சி. 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டது. முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ஒருபுறம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தரவரிசைப் பட்டியலில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்டோரின் பெயர்களை நீக்கி, அடுத்த நிலையில் தேர்ச்சி பெற்றிருந்த தகுதியான தேர்வர்களுக்கு இடமளித்து புதிய தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இந்நிலையில் புதிய தரவரிசை பட்டியலின் அடிப்படையில் 9,882 பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நியமனக் கலந்தாய்வு மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தரவரிசை அடிப்படையில் பல கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறுவதால், தேர்வர்கள் எப்போது கலந்தாய்வுக்கு வர வேண்டும் என்பது குறித்த தகவல்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments