கோர தாண்டவமாடும் கொரோனா....! பலி எண்ணிக்கை 2000...!

0 1890

சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. வூஹான் நகர மருத்துவமனை இயக்குநரும் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ஒரே இரவில் 200 பேர் உயிரிழந்ததை அடுத்து சீனாவில் மட்டும் கொரானா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 75 ஆயிரத்து 213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மருத்துவ பணியாளர்கள் 3 ஆயிரத்து 19 பேரும் இவர்களில் அடக்கம்.

தொற்று பாதித்தவர்களில் 12 ஆயிரத்து 57 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாடுகளைப் பொறுத்தவரை 25 நாடுகளில் சுமார் 800 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹூபே மாகாணம், வூஹான் நகரிலுள்ள வூசாங் மருத்துவமனையின் இயக்குநர் லியூ ஷிமிங்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அவரைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்து, அவர் உயிரிழந்ததாகவும் சீன அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. லியூவின் மரணம் சீன மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரானா தொற்றை கட்டுப்படுத்த சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்கள், பெய்ஜிங், குவாங்டாங், (Guangdong) சிச்சுவான்(Sichuan ) ஆகிய மாகாணங்களில் பயணம் செய்கின்றனர்.

இதனிடையே, ஜப்பானில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில், கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது. கப்பலில் இருந்தவர்களில் ஆயிரத்து 219 பேருக்கு நடந்த பரிசோதனையின் முடிவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 454 ஆக இருந்தது. இதற்கிடையே, தொடர்ந்து கப்பலில் இருந்தோரிடம் நடந்த பரிசோதனை முடிவுகளில் இருந்து புதிதாக 88 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவில் இருந்து இறுக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென சீன நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. நீண்ட ஆலோசனைக்கு பிறகு இதனை ஏற்றுக்கொண்ட சீன அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அறிவித்துள்ளது. இந்த வரிவிலக்கு வருகிற 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், குறிப்பிட்ட காலம் வரை அமலில் இருக்கும் என்றும் சீன வரிவிதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments