சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடக்குமென்ற அறிவிப்பால் போலீசார் குவிப்பு...

0 1443

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்த, சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு  உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தடையை மீறி போராட்டம் நடக்கும் என்ற அறிவிப்பை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, புதன்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிட உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அறிவித்தன. இதற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், முற்றுகை போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், சட்டம் ஒழுங்கும் பாதிக்க வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகர காவல்துறை தரப்பில், சட்டப் பேரவை முற்றுகை போராட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறிவித்துள்ள சட்டவிரோத முற்றுகை போராட்டத்திற்கு, இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு போராட்டமானது கண்காணிக்கப்பட உள்ளது.

இந்த சாலை முழுவதும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான தடுப்புகள் தயார் நிலையில் உள்ளன. தடையை மீறி பேரணியில் ஈடுபடுபவர்கள் தடுத்து நிறுத்தப்படுவர்கள். மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. போராட்ட காரர்களின் எண்ணிக்கை பொறுத்து காவலர்கள் கூடுதலாக பணியில் ஈடுபட வாய்ப்பு என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments