டிஎன்பிஎஸ்சி முறைகேடு - மேஜிக் பேனா மோசடிகாரரின் பின்னணி !

0 1173

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் மேஜிக் பேனா தயாரித்துக் கொடுத்து முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட அசோக் குமார், சென்னையில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி லட்சகணக்கில் பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு  பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 குரூப்2 ஏ மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளில் முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாருடன் இணைந்து  மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற நபரை திங்கட்கிழமை அன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

முறைகேடு செய்த தேர்வர்களுக்கு மேஜிக் பேனா வாங்கி கொடுத்தது அசோக் குமார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஜெயக்குமார் சொல்லும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அசோக் குமாரின் அலுவலகத்தில் வைத்து விண்ணப்பதாரார்கள் இல்லாமலேயே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேக்னஸ் கல்சல்டன்சி எனும் பெயரில் அசோக் குமார் நடத்தி வந்த வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் பலரையும் ஜெயக்குமாருக்கு அறிமுகப்படுத்தி தேர்வுகளிலும், வேலை வாங்கி தருவதிலும் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தமிழக தலைமை செயலகத்தில் நிதி துறையில் பணியாற்றிய தீபக் என்பவருக்கு உதவியாளர் பணிக்கு 8 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு இடைத்தரகர் ஜெயக்குமார் மூலம் வேலை வாங்கி கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசோக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே குரூப் 4 தேர்வு முறைக்கேட்டில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரை விஏஓ தேர்வு முறைகேடு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனுமதிகோரி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments