தாயை அவதூறு பேசி அத்துமீறல் மகனை கொன்று கூறுபோட்ட தாய்

0 2448

தேனி மாவட்டம் கம்பம் அருகே பெற்ற மகனை கொடூரமான முறையில் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக தாயும் சகோதரரும் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் தாயிடம் அவதூறாக பேசி அத்து மீறலில் ஈடுபட்டதால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கம்பம் அருகே தொட்டன்மன் துறையில் முல்லைப்பெரியாறு தடுப்பணை அருகே உள்ள புதரில் இருந்து ஆண் ஒருவரின் தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வந்து அந்த உடலை வீசிச் சென்றதையும், இருவரும் கம்பத்தைச்சேர்ந்த செல்வி அவரது மகன் விஜயபாரத் என்பதையும் கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் வீசிச் சென்றது செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் உடல் என்கிற திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் செல்வி அளித்த தகவலின் பேரில் விவசாய கிணறு ஒன்றில் இருந்து தலையையும், மற்றொரு கிணற்றில் கை, கால்களையும் மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து செல்வியும் அவரது மகன் விஜய்பாரத்தும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில், கோவையில் பொறியாளராக பணி புரிந்த விக்னேஷ்வரனுக்கு திருமணம் ஆகாத நிலையில், கடந்த வாரம் அவரது தம்பி விஜயபாரத்துக்கு திருமணம் நடந்தது. அதில் பங்கேற்க வந்த விக்னேஷ்வரன் பணிக்கு செல்லாமல், மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார்.

மேலும் தம்பிக்கு மட்டும் திருமணம் செய்வதா என்று கேட்டு தொடர்ந்து மதுபோதையில் தாயிடம் அவதூறாக பேசி அத்துமீறி நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, விக்னேஷ்வரனுக்கு பாலில் தூக்கமாத்திரை கலந்து பின்னர் கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அதன்பிறகு இளைய மகன் விஜயபாரத் வந்ததும் அவர் உடலை துண்டு துண்டாக வெட்டி 3 மூட்டையில் கட்டி வீசியதாகவும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments