“லாரியை ஏற்றி கொன்று விடுவோம்” - மக்களை மிரட்டும் மண் திருடர்கள் !

0 2139

காஞ்சிபுரம் அருகே ஏரியை தூர்வார அனுமதி பெற்றுவிட்டு அதிலிருந்து மண்ணைச் சுரண்டி செங்கல் சூளைகளுக்கும் மணலைச் சுரண்டி கட்டுமானப் பணிகளுக்கும் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

அதிகாரிகளும் கண்டுகொள்ளாத நிலையில், தட்டிக்கேட்கும் தங்களையும் குண்டர்களை வைத்து மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியை தூர்வார டெண்டர் விடப்பட்டு, பொதுப்பணித் துறையும் புவியல் துறையும் அனுமதி வழங்கியுள்ளன.

இந்த அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி களிமண் சுரண்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கும் அதற்குக் கீழுள்ள மணல் சுரண்டி எடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஏரியில் மூன்று அடி ஆழத்துக்கு மட்டுமே மண் தோண்ட வேண்டும் என்றும், அந்த மண்ணை ஏரியின் கரைகளில் கொட்டி அவற்றை பலப்படுத்த வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது. கிடைக்கும் மிகை மண்ணைக் கொண்டு வரத்து கால்வாயில் குறுக்கே தடுப்பணைகள் கட்டவும், ஏற்கனவே இருக்கும் அணைகள் வலுவிழந்து காணப்பட்டால் அதை பலப்படுத்தவும் பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் அந்தக் கால்வாய் கரைகளை பலப்படுத்தவும் புதிய வடிகால் அமைக்கவும் ஏரியிலிருந்து எடுக்கப்படும் களிமண்ணை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. விதிவிலக்காக விவசாயப் பணிகளுக்கு மண் எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் போர்வையில் மண் வியாபாரிகள் ஏரிகளில் மண் அள்ளிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் 20 அடி ஆழம் வரை தோண்டி மண்ணையும் அதன் கீழ் கிடைக்கும் மணலையும் எடுப்பதாகக் கூறப்படுகிறது.

இரவும் பகலுமாக எடுக்கப்படும் மண், முசரவாக்கம், களக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்குத் தயாராக உள்ள காலிமனைகளில் கொட்டப்பட்டு, அடித்தளம் போடப் பயன்படுத்தப்படுவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கும் செங்கல் சூளைகளுக்கும் ஏரி மண் ஒரு லோடு 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரவும் பகலுமாக தொடர்ந்து நடைபெறும் இந்த மண் திருட்டை தட்டிக் கேட்கச் சென்றால் தங்களை லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என அவர்கள் மிரட்டுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்து ஓய்ந்துபோனதாகக் கூறும் விவசாயிகள், இந்த மண் சுரண்டலைத் தடுக்காவிட்டால் நிலத்தடி நீராதாரம் முழுமையாக பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

மண் வளத்தையும், நிலத்தடி நீர் வளத்தையும், விவசாயத்தையும் பாதிக்கும் இந்த மண் திருட்டைத் உடனடியாக தடுத்து நிறுத்தி, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments