தும்மினால் கூட எலும்பு முறிவை ஏற்படுத்தும் "Osteoporosis" நோய்.. யாரை அதிகம் தாக்கும்?

0 5712

வலுவான எலும்புகளே ஆரோக்கியமான உடலுக்கு அஸ்திவாரம். நல்ல உறுதியான எலும்புகளே நம்மை துடிப்புடன் செயலாற்ற வைக்கும். மொத்த உடலையும் தாங்கி நிற்கும் எலும்புகள், மிக எளிதாக முறிய கூடிய அபாயத்தை சத்தமின்றி ஏற்படுத்துவது ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) எனப்படும் எலும்பு புரை நோய்.

எதனால்.?

வைட்டமின் டி, கால்சியம் குறைபாடு, சத்துமிக்க உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி ஸ்டிராய்ட் மருந்துகளை எடுத்து கொள்வது,உடல் உழைப்பின்மை, புகை மற்றும் மது பழக்கமும் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

யாரை அதிகம் தாக்கும்.?

பொதுவாக ஆஸ்டியோபோரோசிஸ் 50 வயதை தாண்டியவர்களை அதிகம் பாதிக்கும். அதுவும் ஆண்களை விட பெண்களையே இந்த நோய் அதிகம் தாக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு, ஹார்மோன் சுரப்பு குறைவதால் எலும்புகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களை விட பெண்களை எளிதில் தாக்குகிறது. பெற்றோருக்கு இந்த நோய் இருப்பின், பிள்ளைகளுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் வர வாய்ப்பு உள்ளது.

imageஎன்ன ஆபத்து.?

இந்த நோயின் இயல்பு எலும்பின் திசுக்களை சிதைவடைய செய்வது ஆகும். எலும்பு திசுக்கள் சிதைந்து எலும்புகள் பலவீனமடைவதால் இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகிய எலும்புகள் எளிதாக முறிய கூடிய நிலை ஏற்படுகிறது.

தும்மினால் கூட..
சில நேரங்களில் இந்த நோய் தாக்கியதற்கான அறிகுறியே உடலில் தெரியாது. ஆனால் நடக்கும் போது லேசாக கால் தடுக்கி கீழே விழுந்தாலே, எலும்பு முறிவு ஏற்படும் என்பதிலிருந்தே இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை உணர முடியும். அவ்வளவு ஏன் ஆஸ்டியோபோரோசிஸ் தாக்கியவர்கள் கடுமையாக தும்மினால் கூட எலும்பு முறிவு ஏற்படும் என கூறி அதிர்ச்சியளிக்கிறார்கள் மருத்துவர்கள்.

imageபொதுவான அறிகுறி..

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எலும்பு தேய்மானம் துவங்குவது இயல்பு.எனினும் 6 மாதங்களுக்கு ஒருமுறை எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கால்சியத்தோடு மெக்னிசியம், பொட்டாசியம் ப்ளோரைட் போன்றவை சரி விகிதத்தில் இருந்தால்தான் உறுதியான எலும்புகள் அமையும். சுண்ணாம்பு சத்து மற்றும் உயிர்சத்துக்கள் நிறைந்த உணவுகளான பால், தயிர், கீரை, மீன், கேழ்வரகு போன்றவற்றையும் எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழங்களையும் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

நாள்பட்ட முதுகு வலி, கழுத்து வலி, கை மற்றும் கால் அடிக்கடி மரத்து போதல், உயரம் குறைதல், வளைந்த தோற்றம், இடுப்பு அல்லது முதுகு தண்டு உடைவது உள்ளிட்டவை நிகழ்ந்தால் அது ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

கால்சியம், மெக்னீசியம், ப்ளோரைட், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்த உணவுகள் எலும்பு வளர்ச்சிக்கும், எலும்புகள் பலமாகவும் உதவும். வைட்டமின் டி அதிகம் கிடைக்கும் சூரிய ஒளியில் காலை நடைபயிற்சியில் ஈடுபடுவது நன்மை பயக்கும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments