TNPSC தேர்வு முறைகேட்டில் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினருக்கு தொடர்பு

0 11197

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு,  அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு இன்று தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், சட்டப்பேரவையில் நேற்று பேசியபோது திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், 2006-2011ம் ஆண்டுகாலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்களின் பரிந்துரை கடிதங்கள் முறைகேடு தொர்பான சோதனையின் போது அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் சிக்கியிருப்பதாகவும் பதிலளித்தார்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NpR) குறித்த கேள்விக்கு, அதை மத்தியில் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ், திமுக ஆகியவையே கொண்டு வந்ததாகவும், அது தற்போது நடைமுறைக்கு வருவதாகவும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார். ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் அவதூறு கருத்து திமுகவின் பண்பை காட்டுவதாகவும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments