60கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 60 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் 6 மாதங்களாக காலதாமதம் செய்து வரும் தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் சக்தி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை நிர்வாகம் 6 மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்பிற்கான பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. விவசாயிகளிடம் கரும்பை பெற்றுக்கொண்ட 14 நாட்களுக்குள் பணம் வழங்கவேண்டும் என விதி உள்ள நிலையில், 6 மாதங்களுக்கு மேலாக பணம் வழங்காத ஆலை நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கையில் கரும்பு குறுத்தை ஏந்தியபடி ஆலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ஆயிரத்து 500 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், இந்த நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதாகவும் கூறினார்.
போராட்டம் குறித்து அறிந்த போலீசார் ஆலையின் முன் தடுப்புகள் அமைத்து, விவசாயிகள் முன்னேறி செல்லாத வகையில் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்.
Comments