சிட்டி யூனியன் வங்கியா? சீட்டிங் யூனியன் வங்கியா ? ரூ.1 கோடியே 30 லட்சம் அபேஸ்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, சிட்டி யூனியன் வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து, 2 கோடியே 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை திருடியதாக வங்கி மேலாளர் மற்றும் அரசியல் பிரமுகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் மருதை. ஹார்டுவேர் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
மருதை தனது நண்பரும் அரசியல் பிரமுகரின் மகனுமான வீரவேல் என்பவரின் சிபாரிசின் பேரில், தொழில் அபிவிருத்திக்காக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், விளந்தை சிட்டி யூனியன் வங்கி கிளையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றதாக கூறப்படுகின்றது.
கடனுக்கு அடமானமாக மருதை தனது குடும்பத்தினர் பெயரில் உள்ள வீடு மற்றும் நில சொத்து பத்திரங்களை கொடுத்திருந்தார். இதையடுத்து அவரது வங்கி கணக்கிற்கு 3 தவணையாக மொத்தம் 2கோடியே 10 லட்சம் ரூபாய் வந்துவிட்ட நிலையில், அடுத்த 3 மாதங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அளவிலான தொகை மாயமாகி இருப்பது தெரியவந்தது.
பணம் எடுப்பு ரசீது, காசோலை, மொபைல் குறுந்தகவல் ஏதும் இன்றி தனது வங்கிக் கணக்கில் பணம் எடுத்தது எப்படி? என்று வங்கிக்கு சென்று வியாபாரி மருதை கேட்ட போது சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சூரிய நாராயணன் வசமாக சிக்கிக் கொண்டார். கடன் கொடுக்க சிபாரிசு செய்த வீரவேலுடன் சேர்ந்து எந்த ஒரு ஆவணப் பதிவும் இன்றி மருதையின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மோசடியாக திருடியது வெளிச்சத்திற்கு வந்தது.
விரைவில் வீரவேலுக்கு 2 கோடி ரூபாய் கடன் வழங்க இருப்பதால் எடுத்த பணத்தை அதில் இருந்து திருப்பி கொடுத்து விடுவதாக இருவரும் உறுதி அளித்து உள்ளனர்.
மாதக்கணக்கில் நாட்களை கடத்திய நிலையில் வியாபாரி மருதை தான் பெறாத கடனுக்கும் சேர்த்து மாதா மாதம் வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் மோசடியை சுட்டிக்காட்டி வட்டிப்பணம் செலுத்த இயலாது என்று மருதை கூறியதால் மீதி பணத்திற்காக மருதையின் சொத்துக்களை ஏலம் விடப் போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது சிட்டி யூனியன் வங்கி..!
இதையடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து திருட்டுத் தனமாக எடுக்கப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை வட்டியுடன் செலுத்தக் கோரி வங்கி மேலாளர் சூரிய நாராயணனிடமும், வீரவேலிடமும் சென்று முறையிட, அரசியல் பிரமுகரான வீரவேலின் தந்தை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து செய்வதறியாது திகைத்த மருதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அரசியல் நெருக்கடியால் விசாரிக்க மறுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மருதை நீதிமன்றத்தை நாட, புகாரை விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் சூரிய நாராயணன், அரசியல் பிரமுகரின் வாரிசு வீரவேல் ஆகியோர் மீது கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர இயலாத 10 பிரிவுகளின் கீழ் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தங்கள் வங்கிக்கு அவப்பெயர் வந்துவிடும் என்று வங்கி மேலாளரைக் காப்பாற்ற சிட்டி யூனியன் வங்கி உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தடைஆணை பெற்றனர்.
அரசியல் பிரமுகரின் வாரிசான வீரவேலை கைது செய்யவும் தடை உத்தரவு பெறப்பட்டது. சொத்துக்களை ஜப்தி செய்யப்போவதாக அறிவித்த சிட்டி யூனியன் வங்கி, மருதையுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. வங்கி மேலாளர் மற்றும் வீரவேல் திருட்டுத்தனமாக எடுத்ததாகக் கூறப்படும் தொகை தவிர்த்து மீதம் உள்ள தொகையை மட்டும் கட்டும் படி ஒப்புக் கொண்டது. ஆனால் முழுத் தொகையான 2 கோடியே 10 லட்சம் ரூபாயும் வட்டியுடன் தங்கள் கைக்கு வந்த பின்னர் தான் வீடு மற்றும் சொத்து பத்திரங்களைத் தருவோம் என நிபந்தனை விதித்தது.
இந்த நிலையில் வங்கி மேலாளர் சூரிய நாராயணனை விசாரிக்கத் தடையில்லை என்று முதலில் அறிவித்த நீதிமன்றம், வீரவேலை விசாரிக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை திங்கட்கிழமை விலக்கிக் கொண்டது.
வியாபாரியின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் திருடிய இருவரையும் கைது செய்வதோடு, மோசடிக்குத் துணை நின்ற சிட்டி யூனியன் வங்கியின் உயர் அதிகாரிகளையும் காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே வங்கிகளை நம்பி பணத்தைச் செலுத்தும் சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..!
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments