டிக் டாக் மோகத்தில் மூழ்கி காதலர் தினத்தன்று ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் அடித்துக் கொல்லப்பட்ட மனைவி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டிக் டாக் மோகத்தில் மூழ்கியதோடு காதலர் தினத்தன்று ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேஷ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், டிக் டாக்கில் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வந்துள்ளார் ராஜேஷ்வரி.
வீட்டு வேலைகளை செய்யாமலும், கணவரை கவனித்துக் கொள்ளாமலும் டிக் டாக்கே கதி என ராஜேஸ்வரி இருந்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே திருநங்கைகளுடன் நெருங்கி பழகியதாகச் சொல்லப்படும் குமரவேல் வழிப்பறி வழக்குகளில் இரண்டு முறை சிறைக்கு சென்றதால், மருமகனை ஜாமீனில் வெளியே எடுக்க ராஜேஸ்வரியின் தாயார் காடாம்புலியூரைச் சேர்ந்த ஒருவரை அடிக்கடி உதவிக்கு அழைத்துள்ளார். இதனால் அந்த நபருக்கும் ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காதலர் தினத்தன்று ராஜேஸ்வரி தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனை குமரவேல் கண்டித்த நிலையில் மறுநாளும் அதே போன்று ஆண் நண்பருடன் ஊரை சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த குமரவேல் மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்த நிலையில், அதனை ராஜேஷ்வரி கண்டு கொள்ளாமல் உறங்கச் சென்றாகக் கூறப்படுகிறது.
இதனால் நிதானம் இழந்த குமரவேல் அருகில் இருந்த குழவிக் கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியின் தலையில் போட்டுள்ளார். இருந்தாலும் கோபம் அடங்காத அவர் இரும்பு கம்பியால் தலையில் மூர்க்கமாக தாக்கி ராஜேஷ்வரையை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மகனை தனது தாயாரின் வீட்டில் விட்டுவிட்டு வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற குமரவேலை பண்ருட்டி பேருந்து நிலையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணங்கள் தெரியவந்தன.
லைக்கிற்காக டிக் டாக்கில் மூழ்கி கிடக்கும் பெண்கள், குடும்ப சூழலை நினைக்காமல் தடம் மாறிச் சென்றால் என்ன நிகழும் என்பதற்கு சான்றாழ் நிகழ்ந்திருக்கிறது இச்சம்பவம்
Comments