ராணுவத்தில் ஆண், பெண் பாலின சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
ராணுவத்தில் ஆண்களைப் போலவே, பெண் அதிகாரிகளை ஓய்வு வயது வரை பணியமர்த்தவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் படைப் பிரிவுகளுக்கான தலைமைப் பொறுப்புகளை வழங்குவதற்கும் பாலின அடிப்படையில் எவ்வித தடையும் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவத்தில் பாலின பாகுபாட்டை ஒழித்துக் கட்டும் இந்த அதிரடி தீர்ப்பை 3 மாதங்களில் செயல்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது ராணுவத்தில் பெண் அதிகாரிகள் 10 முதல் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இதேபோல, நேரடியாக போரில் ஈடுபடும் படைப் பிரிவுகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், ராணுவத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில், நீதிபதிகள் சந்திரசூட், அஜய் ரஸ்தோகி அமர்வு முக்கிய தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது.
சமூக நடைமுறைகள், உடலியல் சார்ந்த வரம்புகள், குடும்ப கடமைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி பெண்களுக்கு சமத்துவமான வாய்ப்புகளை மறுப்பதா என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 10 முதல் 14 ஆண்டுகள் என்ற வரம்பை தளர்த்தி, ராணுவத்தில் ஓய்வு வயது வரை பணியாற்ற பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இத்தகைய பாலின பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசுக்கு மனமாற்றம் ஏற்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு வாய்ப்புகளை மறுப்பதற்கு, சமூக விதிகளையும், உடலியல் சார்ந்த வரம்புகளையும் சுட்டிக்காட்டும் மத்திய அரசின் வாதம் சங்கடம் அளிப்பதாகவும், பெண் அதிகாரிகள் மிகச்சிறப்பாக செயல்பட முடியாது என்றோ வெற்றி மகுடங்களை சூட்ட முடியாது என்றோ கூறிவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
படைப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்புகளுக்கு பெண் அதிகாரிகளுக்கு முற்றாக தடை என்பது, அறிவுக்கு பொருத்தமற்றது என்பதோடு சமத்துவத்திற்கு எதிரானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். படைப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்புகளை பெண்களுக்கு வழங்க மறுப்பதோ அதற்கு முற்றாக தடை விதிப்பதோ சட்டத்தின் முன் ஏற்புடையது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பலவீனமான பாலினம் அல்ல என்றும், அவர்கள் ஆண் அதிகாரிகளுக்கு நிகராக கருதப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், ஆண்களைப் போலவே பெண்களும் ராணுவத்தில் கர்னல் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளை தகுதியின் அடிப்படையில் பெறமுடியும். இந்த உத்தரவை 3 மாதங்களில் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments