ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபரை 6 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்பு
கர்நாடகாவில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர், 6 மணி நேர தீவிர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
உப்புந்தாவைச் சேர்ந்த ரோகித் கார்வி என்பவர், மரவந்தே பகுதியில் ஆழ்துளை கிணற்றில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மண்சரிவு ஏற்பட்டு, தவறி விழுந்தார். சக தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் வந்த மீட்பு படையினர் 20 ஆடி ஆழ கிணற்றில் 15 அடியில் தலை மட்டும் வெளியில் தெரிந்த நிலையில் சிக்கித் தவித்த ரோகித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், ரோகித் விழுந்த கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் உதவியுடன் குழி தோண்டப்பட்டு அங்கிருந்து ரோகித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு துளை போட்டு, இறுக்கத்தை தளர்த்தி, அவரை 20 அடி ஆழத்துக்கு கீழே இறக்கினர். பின்னர் மேலிருந்து அனுப்பப்பட்ட கயிறை பிடித்துக்கொண்டு ரோகித் மேலே வந்தார். 6 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டதை கண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Comments