வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் - முதலமைச்சர்

0 2500

சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதி பெறாமல் போராட்டத்தை நடத்தியதாலும், சில சக்திகளால் வன்முறை தூண்டப்பட்டதாலும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வாய்ப்பில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று, கேள்வி நேரம் முடிந்ததும், குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் எழுப்பப்பட்டது. குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை விதி 173(உ) படி, முந்தைய கூட்டத்தொடரில் கொடுத்த தீர்மானத்தை அடுத்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

எனவே, கடந்த கூட்டத்தொடரில் திமுக கொடுத்த தீர்மானத்தை தற்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என சபாநாயகர் விளக்கம் அளித்தார். அதேநேரம் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நடைபெறும் வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக விவாதிக்க அனுமதி அளிப்பதாக சபாநாயகர் கூறினார்.

இதையடுத்து, வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசினார். அனுமதியை மீறி போராட்டம், பேருந்து கண்ணாடிகளை உடைத்தது என கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்ட போலீசார் மீது தண்ணீர் பாட்டில், கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.

வெளியில் இருந்து வந்த சிலர் உள்ளூர் மக்களை தூண்டி சாலை மறியலில் ஈடுபடுத்த முயன்றது, பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தது என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 82 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற 6 தெருக்கள் தள்ளி, மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரை, போராட்டத்தில் பங்கேற்றுத்தான் உயிரிழந்ததாக சிலர் வதந்தியை பரப்பியதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். சிறுபான்மையின மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

முதலமைச்சரை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கூறினார். இதையடுத்து அவர் கூறிய சில கருத்துகளையும், மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்ததையும் அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கி உத்தரவிட்டார்.

இதனையடுத்து முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments