கொல்லும் கொரோனா; பரிதவிக்கும் பயணிகள்..!

0 1683

சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ள நிலையில், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள தங்கள் நாட்டுப் பயணிகளை மீட்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரசுக்கு மக்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 110 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹூபே மாகாணம் வூகான் நகரில் மருத்துவத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் 28 நாடுகளில் பரவியுள்ள கொலைகார கொரோனாவால் 71 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய நிலையில் 11 ஆயிரத்து 298 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 3000 ஆண்டு பழமையான மருந்துகளை சீனா கொடுத்து குணப்படுத்த முயன்று வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொல்லப்படுவதால், பாரம்பரிய சீன மருத்துவர்கள் சுமார் 2200 பேர் ஹுபே மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே 3,711 பேருடன் ஜப்பான் யோகஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் மேலும் 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. அந்த கப்பலில் 132 பணியாளர்கள், 6 பயணிகள் என 138 இந்தியர்களும் உள்ளனர்.

அவர்களில் 3 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அந்த கப்பலில் இருப்பதால் அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக 400க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை மீட்க அந்நாடு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் முதற்கட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஜப்பானிலேயே சிகிச்சை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அவ்வாறு நோய் தாக்கப்படாதவர்களை உடனடியாக அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நோய்த் தொற்று இருப்பவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் உடன்பட மறுத்து வருகின்றனர். மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கப்பலில் தவித்து வரும் தங்களை மீட்க அமெரிக்க அரசு இவ்வளவு காலதாமதம் செய்தது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments