கனமழையால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...
இங்கிலாந்தை மிரட்டும் டென்னிஸ் புயலால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் வீசிய டென்னிஸ் புயலால் மணிக்கு 146 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் போலீசாரின் கண்முன்னே இருவர் மாயமாகி உள்ளனர்.
வெள்ளம் காரணமாக சவுத் வேல்ஸ் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் ஒன்றிலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவு பார்ப்பவர்களை அச்சுறுத்தியது.
மழை காரணமாக வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றபடி உள்ளன. லாக்ஸிலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் கரையோரங்கள் அரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஊருக்குள் வந்த வெள்ளம் கார்களை இழுத்துச் சென்றது.
வீடுகளுக்குள் சிக்கிய முதியவர்கள் மற்றும் பெண்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளநீரில் நீந்தி விளையாடிய இரு இளைஞர்கள் காவல்துறையினர் கண்முன்னே மாயமாகி உள்ளனர்.
ஓயாமல் பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிந்து வருகின்றன. உபரி நீர் வெளியேற்றத்தால் இதனால் சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளிகள் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது தண்டவாளங்களும், சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் இருதரப்பு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
வேகமாக வீசி வரும் காற்றின் காரணமாக விமானப் போக்குவரத்தை இயக்குவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தரையிறங்க முயன்று முடியாத விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. தொடர் மழை வெள்ளம் காரணமாக சவுத் வேல்ஸ் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments