முதலமைச்சருடன் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் சந்திப்பு... சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் குறித்து விளக்கம்...

0 1016

தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் முதலமைச்சரை நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசினர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் குற்றம்சாட்டி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்தும் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இதனிடையே தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ள டிஜிபி, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4-வது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி நிர்வாகி தெகலான் பாகவி, இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் உறுதியளித்ததாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments