சென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...!நடந்தது என்ன..?
சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் வெளிநாட்டு கண்டெய்னர் வழியாக சிங்கம் வந்துவிட்டதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பப்படும் செய்தி, வதந்தி என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஊடுருவியுள்ள, சமூக விரோதிகளால் பரப்பப்படும் பொய்யான பரப்புரையின் விபரீதம் குறித்து விவரிக்கிறது.
சென்னை எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் பெண் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதாகவும், அங்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், ஊர் பெயர் சொல்ல துணிவில்லாத ஒருவன் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றது
கண்டெய்னர் அருகில் சிங்கம் குட்டிகளுடன் நடமாடியது, சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் என்பது தார்பாயில் வடிகட்டியதாக கூறப்படும் பொய் என்று சுட்டிக் காட்டுகிறது காவல்துறை,குஜராத் மாநிலம், பிபாவாவ் (Port Pipavav) துறைமுக பகுதியில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
துறைமுகத்தையொட்டிய காட்டுப்பகுதியில் இருந்து அடிக்கடி சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் இரைதேடி குட்டிகளுடன் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து நடமாடுவதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து நேர்வதாக விரிவாக செய்தி வெளியிட்டு உள்ளது.இந்த இரு சிங்க படங்களையும் திருடிய சமூக விரோதிகள் அதனுடன் விபத்தில் அடிப்பட்டு ரத்தகாயத்துடன் போராடிய இளைஞரின் புகைபடத்தையும் சேர்த்து ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை போன்று கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு வாட்ஸ் அப்பில் சென்னை துறைமுகத்தில் சிங்கம் என்று வதந்தியாக பரப்பிவிட்டுள்ளனர்.
இது போன்று வதந்திகளை வாட்ஸ் ஆப்பில் பரப்பும் சமூக விரோதிகளின் நோக்கம் ஒன்று தான்,நமது மக்களை ஏதாவது அச்சத்துக்குள்ளாக்கி பதற்றத்தில் வைத்திருப்பது, காவல்துறையும், ஆட்சியாளர்களும் மக்கள் பாதுகாப்பில் எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி மக்களின் அமைதியை சீர்குலைத்து மக்களை போராடத் தூண்டுவது..!
இந்த சிங்க கட்டுக்கதை மட்டுமல்ல ஏதாவது போராட்டம் நடந்தால் கூட அதனை வைத்தும் கலவரத்தை தூண்டும் வகையில் பொய்யான கட்டுக்கதைகளை சமூக வலைதளங்களில் பரப்புவதை சிலர் முழு நேரக் தொழிலாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழனா இருந்தா ஷேர் செய்..! என்று இன உணர்வைத் தூண்டுவது, குறிப்பிட்ட மத அடையாளத்தை சுட்டிக்காட்டி பரப்புவது, எந்த மீடியாவும் வெளியிடாது என்று தங்களை சமூக அக்கறையுள்ளவர்களாக காட்டிக் கொள்வது தான் இந்த வதந்தி பரப்புவோரின் வாடிக்கை..!
சமூக வலைதளங்கள் போல உறுதிபடுத்தப்படாத தகவல்களை, சட்டத்துக்குட்பட்டு அரசு அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் மீடியாக்கள் வெளியிட இயலாது. ஆனால் வதந்தியை பரப்பும் சமூக வலைதள மகாபிரபுக்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில், எதையாவது பரப்புவது..! அந்த பொய்யான தகவல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி கிஞ்சித்தும் கவலைபடுவதில்லை..!
சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த போராட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறியாமல், உயிரிழந்தவர் என விபத்தில் பலியான இளைஞரின் படத்தை முகநூலில் வெளியிட்டு தர்மபுரி எம்.பி. மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.எனவே சமூக வலைதளங்களில் வரகூடிய பிரச்சனைக்குரிய எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தாமல் பரப்பாதீர்கள்..!
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பது தானே அறிவு..!
Comments