கொரோனாவைரஸ்: இந்தியாவில் மருந்து உற்பத்தி பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை

0 3012

கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கியிருக்கும் சீனாவிலிருந்து மருந்து மூலப்பொருள்கள் விநியோகம் தடைபட்டுள்ளதால் இந்தியாவில் சில மருந்துகளின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழிற்கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

சீனாவில் மலிவான விலையில் மூலப் பொருள்கள் கிடைப்பதால், அந்நாட்டில் இருந்து 70 முதல் 90 சதவீத மூலப்பொருள்களை இறக்குமதி செய்து இந்திய மருந்து கம்பெனிகள் மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் மூலப்பொருள்கள், சீனாவிலிருந்து வருவது 2 மாதங்களாக முடங்கியுள்ளது.

இதையடுத்து சந்தை நிலவர புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய தொழிற்கூட்டமைப்பான ஃபிக்கி அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய மருந்து கம்பெனிகளால் உற்பத்தி செய்யப்படும் பொது மருந்துகளான பாரசிடமால், இபுபுரூஃபன் (paracetamol, ibuprofen) போன்றவற்றின் உற்பத்தியும், சில நோய்தடுப்பு மருந்துகள், நீரிழிவு மருந்துகள் உற்பத்தியும் பாதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

பாரசிடமால், இபுபுரூஃபன், அம்பிசிலின், சைப்ரோபிளாக்சின் போன்றவற்றின் இருப்பு பிப்ரவரி மாதத்தை தாண்டாது எனவும் ஃபிக்கி குறிப்பிட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள முடக்கம் பிப்ரவரி மாதத்துக்கு பிறகும் தொடர்ந்தால் சில மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரிக்கக்கூடும் எனவும் ஃபிக்கி எச்சரித்துள்ளது.

மலிவான விலையில் கிடைப்பதால் சீனாவில் இருந்து செல்போன் தயாரிப்புக்கான பாகங்கள் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த முடக்கம் தொடர்ந்தால் இந்தியாவில் செல்போன் தயாரிப்பு பாதிக்கப்படும் என்றும், சோலார் சாதனங்கள் உற்பத்தி, ஆட்டோ மொபைல் துறையும் பாதிக்கப்படும் என்றும் ஃபிக்கி குறிப்பிட்டுள்ளது. 

அதேநேரத்தில் மத்திய அரசு தரப்பில் இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதாகவும், சீனாவில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நீடித்தால், அதை சமாளிக்கும் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments