கொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்..! வாகன ஓட்டி மீது தாக்குதல்

0 1956

ரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு மனைவியுடன் சுற்றுலா சென்ற இளைஞரிடம் வாகன நிறுத்தத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்டு பஞ்சாயத்து தலைவரின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், 9 மாவட்டங்கள் நீங்கலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தாலும் முடிந்தது ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள் செய்யும் அலப்பறைகள் அளவில்லாமல் போய்விட்டது.

அந்தவகையில் கொடிவேரி அணையில் பொதுப்பணித்துறை நுழைவு கட்டணம் வசூலிக்கும் நிலையில் கொடிவேறி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இரு சக்கரவாகனத்திற்கு 10 ரூபாயும், கார்களுக்கு 20 ரூபாயும் சட்ட விரோதமாக வசூலிக்கப்படுகின்றது.

சம்பவத்தன்று பக்கத்து கிராமமான அரியப்பம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் தனது மனைவியுடன் கொடிவேரி அணை அருவிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சிலர் ரசீது ஏதும் இல்லாமல் சட்டவிரோதமாக வாகன நுழைவு கட்டணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தங்களை கொடிவேரி பஞ்சாயத்து தலைவர் சிவக்குமாரின் ஆதரவாளர்கள் என கூறிக் கொண்டு அடாவடி பணவசூலில் ஈடுபட்ட அந்த கும்பல் பணம் கொடுக்க மறுத்த தினேஷ்குமாருடன் வாக்குவாதம் செய்து சரமாரியாக தாக்க தொடங்கினர். கணவனை காப்பாற்ற சென்ற அவரது மனைவியையும் அடாவடி கும்பல் தாக்கியது.

பஞ்சாயத்து அதிகாரம் கையில் இருக்கின்றது என்ற ஆணவத்தில் பலர் தடுத்தும் கேட்காமல் பஞ்சாயத்து தலைவரின் கூலிப்படையினர் செய்த அட்டகாசத்தால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தினேஷ்குமார், தனது மனைவியுடன் ஊருக்கு சென்று நடந்ததை சொல்ல மறுநாள் ஊரே திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொடிவேறி அணையில் அட்டாகசம் செய்யும் அடாவடி வசூல் கும்பலை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.

வழக்கு கைது என்று சென்றால் தங்கள் பெயர் கெட்டுபோய்விடும் என்று அஞ்சிய ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரும், அடாவடியாக கட்டணம் வசூலித்த கைக்கூலிகளும் காலில் விழுந்ததோடு, கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்டனர்.

நிஜமாக நடந்த கட்டபஞ்சாயத்தால் பஞ்சாயத்து தலைவர் அடிதடி மற்றும் மானபங்க வழக்கில் இருந்து தப்பினார். இது போல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ளாட்சி பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மணல் திருட்டு, சுற்றுலாபயணிகளை மிரட்டி வசூலிப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments