காதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

0 3984

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே திருமணமான காதலனுடன் காதலர் தினத்தன்று வீட்டில் தனிமையில் இருந்த தனது மனைவியையும், அவரது காதலனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த நடுவலூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், மனைவி பிரியா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அதேப் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை என்பவருக்கும், பிரகாஷின் மனைவி பிரியாவிற்கும் கடந்த ஒரு ஆண்டாக நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், பிரியா கோபித்துக் கொண்டு தனது தாயாரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இது குறித்து கடந்த மூன்றாம் தேதி கெங்கவல்லி காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரை அடுத்து இருவரையும் அழைத்துப் பேசிய போலீசார், கணவன் மனைவியை சமரசம் செய்து சேர்ந்து வாழும் படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காதலர் தினமான வெள்ளிக்கிழமை அன்று பிரியா நீண்ட நேரமாக வீட்டில் இல்லை. அவரது தாயாரின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அங்கும் அவர் இல்லாததால் சந்தேகம் அடைந்த பிரகாஷ், மனைவியிடம் நெருக்கமாக பழகி வந்த சின்னத்துரையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஜன்னல் வழியாக பார்த்த போது இருவரும் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ந்த பிரகாஷ், தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு முன்புறக் கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அதன் பிறகு கோபம் அதிகரிக்கவே அரிவாளுடன் சின்னத்துரையின் வீட்டிற்குச் சென்ற பிரகாஷ், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, படுக்கை அறையில் இருந்த இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் கணவர் பிரகாஷை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments