குட்டிக் கதைக்கு சுட்ட மெட்டு..! அனிருத் மீது அடுத்த புகார்
தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலுக்காக அய்யப்பன் பாடலை சுட்ட புகாருக்குள்ளான இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடலுக்கு அம்மன் பாடலின் மெட்டை சுட்டதாக புகார் எழுந்துள்ளது.
தர்பார் படத்தில் சும்மாகிழி பாடலுக்காக அய்யப்பன் பாடல் ஒன்றின் மெட்டை சுட்டதாக இசையமைப்பாளர் மீது புகார் முன்வைக்கப்பட்டது. இருந்தாலும் அசராத அனிருத், அதை பற்றி கவலை படவில்லை.
இந்த நிலையில் வெளியான 24 மணி நேரத்தில் 85 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ள மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடலுக்கான மெட்டும் காப்பி என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ராஜகாளியம்மன் படத்தில் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் இடம் பெற்ற சந்தன மல்லிகையில் தூளி கட்டிப்போட்டேன்... என்ற பாடலின் மெட்டை, அனிருத் அசாத்தியமாக சுட்டு, மாஸ்டருக்கு குட்டி கதை சொல்லி இருப்பதாக நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.
பொதுவாக கதாசிரியர்களுக்கு மட்டும் அல்ல இசையமைப்பாளர்களுக்கு கூட ஒரே போன்று சிந்தனை உதிப்பது காலம் காலமாக தொடர்ந்து வரும் நோய் தான் என்கின்றனர் திரை விமர்சகர்கள். கந்த சஷ்டி கவசத்தை, காதல் பாடலாக்கிய தேவா ஆரம்ப புள்ளியாக சுட்டிக்காட்டப்படுகிறார்.
இசை ஞானியின் இசைவாரிசான யுவன்சங்கர் ராஜாகூட இதற்கு விதிவில்லக்கல்ல என்றும் கற்பூற நாயகியே கனகவள்ளி பாடலில் இருந்து, கருப்பான கையால... பாடலை உருவாக்கிய ஞானகுழந்தை யுவன் தான் என்கின்றனர்..!
இந்த நிலையில் தான் 2000 ஆவது ஆண்டில் வெளியான ராஜகாளியம்மன் பட பாடலின் மெட்டு, 20 வருடங்கள் கழித்து அனிருத்தின் சிந்தையில் உதித்து மாஸ்டர் சிங்கிள் டிராக் ஆக உருமாறி டிரென்டிங் அடித்துக் கொண்டு இருக்கிறது..!
உண்மையிலேயே அனிருத்தும் தமிழ் திரை இசை உலகத்திற்கு கிடைத்த மற்றொரு ஞானக்குழந்தை தான்..!
Comments