மாணவர்கள் மனதில் திருக்குறளை பதியவைக்க ஆசிரியையின் வித்தியாசமான முயற்சி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொடக்கப்பள்ளி ஒன்றின் மாணவர்கள் மனதில் திருக்குறளை பதியவைக்க, அப்பள்ளியின் ஆசிரியை எடுத்துள்ள வித்தியாசமான முயற்சி நல்ல பலனை அளித்துள்ளது.
சாத்தூர் அடுத்துள்ள மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் ஜெயமேரி. உலகப் பொதுமறையாம் திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு செல்ல வித்தியாசமான முறையை கையிலெடுத்தார். தாம் பங்கேற்கும் இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட்டு அவர் சேமிக்கிறார்.
அங்கு பயிலும் 130 மாணவ மாணவிகளுக்கும் உண்டியல்களை வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் சொன்னால் தன் உண்டியலில் இருந்து ஒரு ரூபாய் வழங்குகிறார்.திருக்குறளோடு அதற்கான பொருளும் சொன்னால் 2 ரூபாயை வழங்குகிறார்.இதனால் குழந்தைகள் ஆர்வத்தோடு திருக்குறளை பயில்வதுடன், சேமிப்புப் பழக்கமும் வாசிப்புப் பழக்கமும் வளர்வதாக கூறுகிறார் ஆசிரியை ஜெயமேரி. மேலும் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி, குழந்தைகளின் தனித்திறன்களை வீடியோவாக பதிவிட்டு ஊக்குவிக்கிறார்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கு இணங்க, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணவும் ஆசிரியை ஜெயமேரி தவறுவதில்லை. ஈ மொய்க்கும் திண்பண்டங்களை வாங்கி உண்ணாதிருக்க, சிறுதானிய திண்பண்டங்களை இலவசமாக வழங்குகிறார். அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரின் மாணவர்களை ஊக்குவிக்கும் செயலை பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வரவேற்கின்றனர்.
Comments