ஜம்மு-காஷ்மீர் குறித்து பேசிய துருக்கி அதிபருக்கு இந்தியா எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீர் குறித்து பேசிய துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை ஐநா சபை கூட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேசியபோது எர்டோகன் எழுப்பியிருந்தார். இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை உடனடியாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் நேற்று சுற்றுப்பயணம் செய்த எர்டோகன், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தியபோது, காஷ்மீரில் வாழும் சகோதரர், சகோதரிகள் பல ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களால் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், அந்த துன்பங்கள் அண்மையில் இந்தியாவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மேலும் அதிகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டை துருக்கி முழுவதும் ஆதரிப்பதாகவும் எர்டோகன் கூறினார். முதலாம் உலக போரின்போது துருக்கியில் வெளிநாட்டு படையினருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களோடு, காஷ்மீர் நிலவரத்தை அவர் ஒப்பிட்டு பேசினார். இதையடுத்து பாகிஸ்தான், துருக்கி சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததற்கு எதிராக கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் (Raveesh Kumar ) எர்டோகனின் கருத்து குறித்தும், கூட்டறிக்கை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், அப்பகுதி குறித்து துருக்கி-பாகிஸ்தான் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவற்றை இந்தியா நிராகரிக்கிறது என்றும் கூறினார்.
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என துருக்கி அரசின் தலைமையை கேட்டுக் கொள்வதாக ரவீஷ் குமார் கூறினார். பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தால் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளிட்ட உண்மைகளை துருக்கி தலைமை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். முன்னதாக மலேசிய பிரதமர் இதே பாணியில் பேசி வந்த நிலையில் அந்நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு மறைமுக கட்டுப்பாடு விதித்து இந்தியா பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments