சார் என்னோட Football-ஐ காணோம்.! புகாரளித்த சிறுவன்.. நெகிழ வைத்த போலீஸ்

0 1491

காவலர்கள் என்றாலே காக்கி உடையும், கடுகடுக்கும் பேச்சும் தான் நமக்கு நினைவு வரும். முக்கியமான சில புகார்களை கூட வாங்காமல் காவலர்கள், மக்களை அலைக்கழிக்கும் சம்பவங்கள் ஏராளம். ஆனால் ஒரு சிறுவன் அளித்த புகாரை அலட்சியப்படுத்தாமல், அதன் மீது நடவடிக்கை எடுத்த போலீஸாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அண்டை மாநிலமான கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் Pazhayannur என்ற சிறிய நகரம் உள்ளது. இங்கு உள்ள காவல் நிலையத்திற்கு அண்மையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை காவலர்கள் எடுத்து பேசிய போது, எதிர் முனையில் சிறுவனின் குரல் கேட்டது. என்ன, ஏது என்று போலீஸார் விசாரித்துள்ளனர்.

அப்போது பேசிய சிறுவன் தனது கால்பந்து தொலைந்து விட்டதாகவும், அதை எப்படியாவது கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் சோக குரலில் கேட்டுள்ளான். பந்து காணாமல் போனதெற்கெல்லாம் நம்மிடம் புகார் அளிக்கிறானே சிறுவன் என்று நினைக்காமல், மேற்கொண்டு அவனிடம் விசாரித்துள்ளனர் காவலர்கள்.

அப்போது தன் பெயர் அதுல், வயது 10 என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடர்ந்து பேசிய சிறுவன், தான் வைத்திருந்த கால்பந்து அண்மையில் காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளான். பெற்றோரிடம் இது குறித்து சொன்ன போது, புதிய கால்பந்து வேண்டுமானால் வாங்கி தருகிறோம். காணாமல் போன பந்தை தேடி தர முடியாது என கூறிவிட்டனர்.

ஆனால் எனக்கு காணாமல் போன எனது பந்து தான் வேண்டும், கண்டுபிடித்து தருவீர்களா என்று கேட்டுள்ளான். கவலைப்படாதே கண்டிப்பாக கண்டுபிடித்து தருகிறோம் என உறுதி அளித்தனர் காவலர்கள். சொன்னபடியே சிறுவனின் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது அண்மையில் சிறுவனின் வீட்டருகே நடந்த கால்பந்து போட்டியை காண வந்த சிலர், அதுலின் பந்தை எடுத்து சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து பந்தை எடுத்து சென்ற சிறுவர்களிடம் விசாரணை நடத்தி, பின்னர் அதுலின் பந்தை அவனுக்கே திருப்பி வாங்கி கொடுத்தனர் காவல் துறையினர். காணாமல் போன தன்னுடைய கால்பந்தே திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்தான் சிறுவன் அதுல். அதுலின் முகமலர்ச்சியை கண்டு காவலர்களும் சிரித்த முகத்துடன் அவ்விடத்தை விட்டு சென்றது மக்களை நெகிழ செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments