தமிழக பட்ஜெட் 2020-21: பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,841 கோடி நிதி ஒதுக்கீடு

0 1818

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், பள்ளி கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 841 கோடி ரூபாயும், சுகாதார துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடி ரூபாயும், வேளாண்துறைக்கு  11 ஆயிரத்து 894 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் சாரபங்கா, காவிரி-குண்டாறு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2020-2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத்துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடியும், மின்சாரத்துறைக்கு 20 ஆயிரத்து 115 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு 15 ஆயிரத்து 850 கோடியும், தமிழ்நாடு காவல்துறைக்கு 8 ஆயிரத்து 876 கோடியும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 18 ஆயிரத்து 540 கோடி, வேளாண்துறைக்கு 11 ஆயிரத்து 894 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆயிரத்து 306 கோடி ரூபாயும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6 ஆயிரத்து 754 கோடி, தொழில்துறையை ஊக்குவிக்க 2500 கோடி ரூபாயும், இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல் மீன்வளத்துறைக்கு 1229 கோடி, நீர்ப்பாசனத்துறைக்கு 6 ஆயிரத்து 991 கோடி, கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு 1224 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு 218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், ஊரக வளர்ச்சித் துறைக்கு 23 ஆயிரத்து 161 கோடி, பள்ளிக் கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 181 கோடி, உயர்கல்வித் துறைக்கு 5 ஆயிரத்து 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு 3,099 கோடி ரூபாயும், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்திற்காக 3700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் சாரபங்கா நீரேற்றுப் பாசன திட்டத்திற்கு 350 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்துக்காக 300 கோடி ரூபாயும், வரும் நிதி ஆண்டில் கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு 300 கோடி மற்றும் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் வடிகால்கள் சீரமைக்க 5,439 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல், முதனிலை பணிகளுக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு 253.14 கோடி ரூபாயும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தை செயல்படுத்த 959 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி தொழில்வழித் தட திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 3100 கோடியும், பாரத் ஸ்டேஜ் - 6 தரம் கொண்ட 2,213 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான திட்டத்துக்கு 960 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments