புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்..

0 1953

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத வகையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 27ஆக உள்ளதாகவும், வரும் நிதியாண்டு முடிவில், நிகர கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும், துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அதில், தமிழ்நாடு மாநிலத்தின் வருவாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 375 கோடி ரூபாய் என்றும், வட்டியல்லாத செலவு 2 லட்சத்து 41 ஆயிரத்து 601 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வட்டியல்லாத செலவில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக செலவிட திட்டமிடப்பட்டுள்ள மொத்த தொகை 96 ஆயிரத்து 217 கோடி ரூபாய் ஆகும். உலக மற்றும் தேசிய பொருளாதாரச் சூழலில் வீசி வரும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருவதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தேசிய அளவில் கணிக்கப்பட்டுள்ள 5 விழுக்காடு வளர்ச்சியை காட்டிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

வரும் நிதியாண்டு முடிவில், நிகர கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இது மாநில ஜிடிபியில் 21.83 சதவீதம் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகள் தொடர்ச்சியாக அதிக அளவில் வருவாயை ஈட்டித் தருகின்றன. பட்ஜெட்டில் வணிக வரிகளின் ஒட்டுமொத்த வசூல் தொகை 1,02,236 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் சொந்த வரி வருவாய் மீதான மொத்த வரவினங்கள் 1,33,530 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரி மற்றும் வரி அல்லாத இனங்களின் மூலம் மாநிலத்தின் சொந்த வருவாய், 1,49,429 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 நிதியாண்டின் இறுதில் நிலுவையில் உள்ள நிகரக் கடன் 4,56,600 கோடி ரூபாயாகவும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 21.83 சதவீதமாக, 25 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments