கிரிமினல் வேட்பாளர்கள் ஏன்..? அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!
தகுதியான நல்ல வேட்பாளர்கள் இருந்தாலும், குற்றப்பின்னணி உள்ள நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை வெளியிடுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தொடர் அறிவுறுத்தலை மதிக்காமல், கிரிமினல் நபர்களுக்கு, அரசியல் கட்சிகள் தேர்தல் வாய்ப்புகளை வழங்குவதை தடுக்க, தேர்தல் ஆணையமும், அரசும் தவறிவிட்டதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், ரவீந்திர பட் அமர்வு இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
இனிமேல், சட்டப்பேரவை மற்றும் பொதுத் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து, இணையதளம், சமூக வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் அரசியல் கட்சிகள் தகவல் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள், ஒரு உள்ளூர் நாளிதழ். ஒரு தேசிய நாளிதழ், முகநூல், டுவிட்டர் ஆகியவற்றில், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம், அது தொடர்பாக குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் கெடு விதித்துள்ளனர்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது என்ற அறிக்கையை 72மணி நேரத்திற்குள் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் . இதை மீறும் அரசியல் கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
குற்றப்பின்னணி இருந்தாலும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது போன்ற காரணங்களை தவிர்த்து விட்டு கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான இதர காரணங்களை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
கிரிமினல் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் முன்பு அறிவுறுத்தினாலும், அது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என தேர்தல் ஆணையம் பதிலளித்தது.
ஆனால் இதற்கான விதிமுறை மாற்றங்களை கொண்டுவர தேர்தல் ஆணையம் தவறியதால், அரசியல் கட்சிகள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றி விட்டதாக பாஜக வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யாயா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த நிலையில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் போடும் வகையில் அமைந்துள்ளது.
Comments