குரூப் 2ஏ முறைகேட்டில் மேலும் ஒரு இடைத்தரகர், இரு பெண்கள் கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகர் மற்றும் இருபெண் ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ முறைகேட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஜெயக்குமார், பாலசுந்தர் ராஜ், வெங்கட்ரமணன் தவிர 3 காவலர்கள், 23 அரசு ஊழியர்கள், 9 தேர்வர்கள், 5 ஓட்டுனர்கள் என 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குரூப் 2ஏ முறைகேட்டில் தற்போது மேலும் ஒரு இடைத்தரகர் மற்றும் இருபெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த அனிதா மற்றும் பூர்ணிமா ஆகியோர் இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு முறையே 11 லட்சம், 12 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்றதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.
இடைத்தரகர் பாஸ்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் 9 லட்சம் ரூபாய் வாங்கி ஜெயக்குமாருக்கு கொடுத்துள்ளதால் அவரும் கைது செய்யப்பட்டார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை மொத்தம் 45 பேர் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இடைத்தரகர் ஜெயக்குமாரின் 12 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அவரிடமிருந்து ரூபாய் 7 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் முத்துக்குமார் என்பவரும், பணம் கொடுத்து பதவி பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் என்பவரும் தனித்தனியாக ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Comments