ஆஸ்திரேலியா - அதீத பருவநிலை ஏற்ற இறக்கம்

0 1111

ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பருவநிலை நெருக்கடியை பொருட்படுத்தாதன் விளைவுதான் தற்போதைய இயற்கை பேரழிவுக்கு காரணம் என்றும் இது உலக நாடுகளுக்கான எச்சரிக்கை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

தீவு கண்டமான ஆஸ்திரேலியாவில் 1910 ஆம் ஆண்டில் இருந்தே படிபடியாக உயர்ந்து வரும் வெப்பநிலை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தைத் தொட்டது மட்டுமின்றி வரலாறு காணாத வறட்சிக்கும் பல்வேறு இடங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீக்கும் வித்திட்டது.

இதன் விளைவால் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்கள் குறிப்பாக நியூ சவுத் வேல்ஸில் 2017 ஆம் ஆண்டில் இருந்து வெறும் 12 சென்டி மீட்டர் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இவை ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக கிழக்கு கடற்கரையோரம் வெளுத்து வாங்கும் கனமழை, வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. வடமேற்கில் அதிகபட்ச குளிர் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவும் கடும் காற்று மாசு, மக்களை மூச்சு திணற வைத்துள்ளது.

மனிதனால் தூண்டப்பட்ட இந்த அதீத பருவநிலை ஏற்ற இறக்கத்தால் முதல் நாள் 40 டிகிரி செல்சியசுக்கு வெயில் கொளுத்தி விட்டு அடுத்த நாளே ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்க்கும் விசித்திரத்தை ஆஸ்திரேலியா கண்டு வருகிறது. இயற்கையின் இந்த விளையாட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி வனங்களும் விலங்குகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை அதிக அளவு குறைப்பது மற்றும் புதைபடிவ எரிபொருள் ஆற்றல் மூலங்களிலிருந்து விலகிச் செல்வதன் மூலமே இயற்கையின் இந்த மோசமான விளைவுகளை தடுக்கமுடியும் என்று கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நன்மையோ தீமையோ நாம் என்ன கொடுக்கிறோமோ அதைதான் இயற்கை நமக்கு திருப்பி அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments