சென்னை - மைசூரு இடையே அதிவிரைவு ரயில் மார்க்கம்
சென்னை - மைசூரு இடையே மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடைய அதிவேக ரயில் மார்க்கம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யவும் வரைவு வடிவமைப்பை உருவாக்கவுமான டெண்டர் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சென்னை - பெங்களூரு - மைசூரு இடையிலான 435 கிலோமீட்டர் தூரத்தை சதாப்தி ரயில்கள் 7 முதல் ஏழரை மணி நேரத்தில் கடக்கின்றன. இந்நிலையில் இந்த மார்க்கத்தில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் பாதியாகக் குறையும் என்பதால், தேசிய அதிவிரைவு ரயில் கழகம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதற்காக சில உயர்மட்ட மற்றும் நிலத்தடிக் கட்டமைப்புகளுடன் கூடிய ரயில்வே மார்க்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதியாக இந்த மார்க்கம் குறைந்தபட்ச வளைவுகள் மற்றும் சரிவுகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டரில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் ரயில்வே மார்க்கத்துக்கு திட்டமிடப்படும் இடங்களை, லேசர் ஒளிக்கற்றை மற்றும் சென்சார்கள் மூலம் ஆய்வு செய்யும் லிடார் ((Lidar)) எனப்படும் முறை மூலம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, முதல் கட்ட மார்க்கத்துக்கான வரைவு வடிவமைப்பை உருவாக்கும்.
இதன் அடிப்படையில் காடுகள், சமவெளிகள், ஆறுகளை உள்ளடக்கிய வழித்தடங்கள், கட்ட வேண்டிய பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் கூடிய வரைபடம் உருவாக்கப்படும்.
இந்த ரயில்வே மார்க்கம் முக்கிய நகரங்கள், வணிக மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் வகையில், அதிவிரைவுச் சாலைகளை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிரைவு ரயில்வே மார்க்கம் வேலிகளுடன் கூடிய இருவழி மார்க்கங்களை உள்ளடக்கி 50 முதல் 60 மீட்டர் அகலத்துக்கு திட்டமிடப்படுவதால் பல லட்சம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments