கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சூழல்..! சீன அதிபர் தகவல்

0 6106

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் கடும் முயற்சியால் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

கொரனோ வைரஸ் சீனாவை உலுக்கிய நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் பொலிட் பீரோவின் ஆய்வுக்கூட்டம் நேற்று பெய்ஜிங் நகரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரை நிகழ்த்திய சீன அதிபர் ஷி ஜின்பிங் கடுமையான உழைப்பு மற்றும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் கொரனோ வைரசை கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு சாதகமான முடிவுகளை வெளிக்காட்டி வருவதாக தெரிவித்தார். நோய்க்கு எதிராக மக்கள் நடத்தும் யுத்தத்தை வெல்ல அரசின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்றும் சீன அதிபர் வலியுறுத்தினார்.

இதனிடையே கொரனோ வைரஸ் தாக்குதலால் விதிக்கப்பட்ட பல்வேறு கெடுபிடிகளை சீன அரசு தளர்த்தியதை அடுத்து ஷாங்காய் நகரில் ஏராளமானோர் தங்கள் அலுவலகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு நோய் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் பெரும்பாலோர் முகக் கவசம் அணிந்து நடமாடுகின்றனர்.

பெரும்பாலான அலுவலகங்கள் கொரனோ பீதியால் மூடப்பட்டுள்ளன. அதன் ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஆப்பிள் , ஸ்டார்பக் போன்ற பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரனோ வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக அதிகரித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,062 ஆக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments