இலக்கு கடினம் தான்.. எட்டுவோம்.!
நாட்டின் பொருளாதார மதிப்பை 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது கடினம் தான் என்றாலும், அது, அடைய முடியாத இலக்கு ஒன்றும் அல்ல என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
தலைநகர் டெல்லியில், டைம்ஸ் நவ் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் வருடாந்திர கருத்தரங்கில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, புதிய பாய்ச்சலோடு, வலுவான பொருளாதார கட்டமைப்போடு, புதிய இந்தியா பீடுநடைபோடுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டில், எந்தவித பொருளாதார தேக்கமும் இல்லை என்றும், வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான கட்டமைப்போடு இந்தியா இயங்கிக் கொண்டிருப்பதாகவும், பெருமிதம் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார மதிப்பை 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று பிரதமர் கூறினார். இருப்பினும், அது, அடைய முடியாத இலக்கு ஒன்றும் அல்ல என்றும், பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது தலைமையிலான நல்லதொரு நிர்வாகத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளுக்குள், அந்த இலக்கை இந்தியா அடையும் என்றும் பிரதமர் உறுதிபடக் கூறினார். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், நம்மால், வெறும் 3 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை மட்டுமே எட்ட முடிந்திருப்பதாக, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இவ்வளவு எளிதான பொருளாதார மதிப்பை அடைய ஏன் இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொண்டார்கள் என, ஒருவர் கூட கேள்வி எழுப்பவில்லை என்றார். குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவை அனைத்தும் சாம்பிள் தான் என்றும், இனி தான், உண்மையான நடவடிக்கைகளை, இந்திய தேசம் காணப்போவதாகவும், பிரதமர் குறிப்பிட்டார். அது வெறும் செஞ்சூரியாக இருக்காது என்றும், அவை டபுள் செஞ்சூரி அளவுக்கு இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Comments