ரூ.4,000 கோடி மதிப்பிலான சியட் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
தமிழக அரசுக்கும், சியட் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் 4 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணன் தாங்கலில் அமைக்கப்பட்ட ஆலையை இன்று சியட் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா முன்னிலையில் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர், வாகன உற்பத்தியை போல டயர் உற்பத்தியிலும் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றும், நாட்டின் மொத்த டயர் உற்பத்தியில் 40 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரையிலும் ஏராளமான டயர் உற்பத்தி ஆலைகள் இயங்குவதாகவும், அந்த ஆலைகளில் இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்து உத்தரவு வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்த முதலமைச்சர், சியட் நிறுவனம் தனது ஆராய்ச்சி துறையையும் சென்னையில் துவங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் சக்தி உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் டயர்கள் உற்பத்தி செய்யப்படுவதும்,40 சதவீதம் பெண்கள் இங்கு பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. புதிய தொழிற்சாலை திறக்கப்படுவது மூலம் ஆயிரம் பேர் நேரடியாகவும்,10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர்.
Comments