MLAக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக இன்று மீண்டும் தேர்வாகிறார் கெஜ்ரிவால்

0 1386

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் ஆடிப்பாடியும் கொண்டாடினர்.

கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், தேர்தல் முடிவு, புதிய அரசியலின், புதிய தொடக்கம் என்றும், இது நல்லதொரு புதிய சகுனம் என்றும் தெரிவித்தார்.

கெஜ்ரிவாலின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை கெஜ்ரிவாலின் புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 53 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 38 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 5 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட் இழந்தனர்.

தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுபாஷ் சோப்ரா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் கூறியுள்ளார்.

இதனிடையே, டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ காரை நோக்கி நேற்றிரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். மெஹ்ரோலி தொகுதியில் இருந்து டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நரேஷ் யாதவ்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டதும், டெல்லியின் அருகே உள்ள கிஷன்கர் என்ற இடத்திற்கு கோவிலுக்கு சென்ற நரேஷ் யாதவ், தமது கட்சியினருடன் கார்களில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அசோக் மன் என்ற தொண்டர் குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு தொண்டர் படுகாயம் அடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments