மெரினாவில் புற்றீசலாய் அதிகரிக்கும் கடைகள், என்ன செய்யபோகிறது சென்னை மாநகராட்சி ?
சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை, சிறு குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகிய தோற்றம் தான் இது... கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், உழைப்பாளர் சிலை , கற்பாறை சிற்பம், வரலாற்றில் இடம் பிடித்த நாயகர்களின் சிலைகள், முன்னாள் முதலமைச்சர்களின் நினைவிடங்கள் என தமிழகத்தின் அடையாளங்களை பறைச்சாற்றும் மையமாகவும், சென்னைக்கு வரும் சுற்றுலா பிரியர்களின் விருப்ப இடமாகவும் திகழ்கிறது மெரினா.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட கடற்கரை, எண்ணற்ற சிறு குறு கடைகளால் ஆக்கிரமித்துக் கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மெரினா கடற்கரை சீரமைப்பு தொடர்பான வழக்கில், 1,342 சிறுகுறு கடைகள் மட்டுமே இங்கு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி கணக்கு காண்பித்துள்ள நிலையில், கள யதார்த்தமோ அதற்கு நேர்மாறாக பலமடங்கு அதிக எண்ணிக்கையிலான கடைகள் கடற்கரையில் அமைந்துள்ளன. இதிலும் பல கடைகளின் உரிமையாளர்கள் உள்வாடகைக்கு விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
உழைப்பாளர் சிலையில் அருகே மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு உள்ளே வருவதற்கான சாய்தளம் , பொதுமக்கள் பயன்பாட்டிற்கான படிகள், ஏன் அவசர சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தின் நுழைவுவாயில் கூட ஆக்கிரமிப்பு கடைகள் வசம் இருந்து தப்பவில்லை
இது ஒருபுறமிருக்க, சிற்றுண்டிகள், துரித உணவகங்கள் அனைத்தும் கடற்கரை மணலிலே கூடாரங்களை அமைத்து அடுப்புமூட்டி இருக்கைகளையும் போட்டு இடையூறு ஏற்படுத்துவதாக முகம் சுளிக்கும் பொதுமக்கள், நீதிமன்றம் அறிவுறுத்தியும் கடைகளை வரைமுறைப்படுத்தாமல் மாநகராட்சி காலம் தாழ்த்துவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் காமராஜர் சாலையில் இருந்துகூட கடல்அலைகளைப் பார்த்து ரசிக்க முடிந்ததாகவும், தற்போது வரிசையாக நீண்டு கிடக்கும் கடைகள் கடலின் அழகை மறைத்து நிற்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விளக்கமளித்த மாநகராட்சி அதிகாரிகள் , கடைகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 900 கடைகள் மட்டுமே வைக்க அனுமதித்து, தலா 1,200 ரூபாய் வீதம் வாடகை வசூலிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
உலகளவில் புகழ்பெற்ற மெரினா கடற்கரையை மீட்டெடுத்து பாதுகாக்க, மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே மெரினாவிற்கு வழக்கமாக செல்வோரின் எதிர்பார்ப்பு.
Comments