அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்.. உச்சக்கட்ட பீதியில் சீனா..!
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா, பன்னாட்டு சமூகத்திற்கு "மிகவும் கடுமையான அச்சுறுத்தல்" என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், கொரானா பாதிப்பு, ஏப்ரலுக்குள் முடிவுக்கு வரலாம் என சீன மூத்த மருத்துவ ஆலோசகர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சீனாவின் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கொத்து, கொத்தாக செத்து மடிவதால், சீனர்கள் உச்சக்கட்ட பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர். சீனாவில் 42,638 பேர் உட்பட, உலகம் முழுவதும், சுமார் 45ஆயிரம் பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1018ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைளில் அலட்சியம் காட்டிய புகாரில், 2 சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளை, சீன அரசு டிஸ்மிஸ் செய்திருக்கிறது.
ஜப்பானில், 3,700 பயணிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ள, "தி டைமண்ட் பிரின்சஸ்" (The Diamond Princess) சொகுசு கப்பலில், மேலும் பலருக்கு கொரானா பரவியிருக்க கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங் துறைமுகத்தில் 5 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தி வேல்டு டிரீம் (The World Dream)சொகுசு கப்பலில் இருந்த 2,000க்கும் மேற்பட்டோருக்கு கொரானா இல்லை என தெரியவந்தால், சொந்த ஊர்களுக்குப் பயணமாகினர்.
இதேபோன்று ஹாங்காங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த "தி வெஸ்டர்டேம்"(The Westerdam) சொகுசுக் கப்பலில் உள்ள 3,600 பேரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின், உயர்மட்ட ஆய்வுக்குழு ஒன்று, சீனா வந்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு, பன்னாட்டு சமூகத்திற்கு "மிகவும் கடுமையான அச்சுறுத்தல்" என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவில், கொரோனா பாதிப்பு, ஏப்ரலுக்குள் முடிவுக்கு வரலாம் என அந்நாட்டின் மூத்த மருத்துவ ஆலோசகர் ஜோங் நான்சென் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். இருப்பினும், கொரானா பாதிப்பு இம்மாதம் உச்சம் அடைய வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில், மேலும் ஒருவருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Comments