சிந்துவெளி மக்களோடு கலந்த மரம், சோழர்களின் குல மரம்.. வன்னியின் சிறப்புகள்

0 7646

தமிழகத்தை கட்டி ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்களின் குல மரம், என்ற பெருமையை பெற்றுள்ளது வன்னி மரம். சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று இம்மரம்.

முதன்மையான வன்னி மரம்..

வீரத்தின் அடையாளம், நெருப்பின் வடிவம், வெற்றி சின்னம் என பல்வேறு சிறப்புகளை கொண்டதாக வன்னி மரம் கருதப்படுகிறது. நம் தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும்.

image

சிறப்புகள்..

பனை மரம், நீலகிரி வரையாடு, மரகத புறா இவற்றின் வரிசையில் தமிழரின் வாழ்வியலோடு கலந்த ஒன்று, ஆன்மீகத்திலும், சித்த மருத்துவத்திலும் சிறப்பான இடம் வன்னி மரத்திற்கு உண்டு. அதே போல இந்திய அரசின் அஞ்சல் தலையிலும் இந்த மரம் இடம் பெற்றுள்ளது. இப்படி பல சிறப்புகளை பெற்றுள்ளது வன்னி மரம்.

பாலைவனத்திலும் செழிக்கும்..

பூக்கும் தாவர இனத்தை சேர்ந்த வன்னி மரத்தினுடைய தாவரவியல் பெயர் புரோசோபிஸ் ஸ்பைசிகெரா (Prosopis spicigera) என்பதாகும். இம்மரம் தெற்காசிய நாடுகளை வாழிடமாக கொண்டுள்ளன. வன்னி மரம் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், ஏமன் மற்றும் ஓமன் உள்ளிட்ட மேற்காசியாவை சேர்ந்த நாடுகளிலும் வளர்கின்றன. அதே போல மழை குறைவாக உள்ள இடங்களிலும் வளரும் வன்னி மரம், வறண்ட பாலைவன பகுதிகளிலும் செழிப்பாக வளர கூடிய தன்மையை கொண்டது.

image

சிந்துவெளியின் சிறப்பம்சம்...

வன்னி மரத்திற்கு சிந்துவெளி மக்களின் வாழ்வியலில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் நவ்ஷெரா ( Nowshera ) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானையில் 3 திமில் கொண்ட காளைகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று காளையில் ஒரு காளை வன்னி மரத்தில் கட்டப்பட்டிருக்கும். அதே போல மற்றொரு பகுதியில் வன்னி மரத்திற்கு அடியில் 2 காளைகள் ஒன்றோடு ஒன்று கொம்போடு முட்டி சண்டையிட்டு கொள்ளும் காட்சி பொறிக்கப்பட்ட, தகடு போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம்செழிப்போடிருந்த ராஜஸ்தான் மாநிலத்திலும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் இன்றும் மாநில அரசின் மரமாக இருப்பது வன்னி மரமே.

இலக்கியங்களில்...

சிந்துவெளி மக்களோடு பின்னி பிணைந்த வன்னி மரம், நமது தமிழ் இலக்கியங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டுள்ளது. மன்னர் மறைத்த தாழி, வன்னி மன்றத்து விளங்கிய காடே என்று பதிற்று பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்திலும் வன்னி மரத்தின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரும் வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி என்று தேவாரத்தில் பாடியுள்ளார்.

image

சோழர்களின் குல மரம்:

மூவேந்தர்களில் ஒருவர்களான சோழர்களின் குல மரமாக, வன்னி மரம் இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். யுனெஸ்கோ மரபுரிமை சின்னங்களாக இருக்கும் தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களின் தல விருட்சமாக இருப்பது வன்னி மரமே. ராஜராஜ சோழனுக்கு பிறகு வந்த ராஜேந்திர சோழன் உருவாக்கிய நகரம் கங்கை கொண்ட சோழபுரம். இந்த நகரின் பழைய பெயர் வன்னியபுரம். வன்னி மரங்கள் நிறைந்திருந்த ஊர் என்பதால் வன்னியபுரம் என்றழைக்கப்பட்டு வந்துள்ளது.

தல விருட்சம்:

குறிப்பிடப்பட்ட கோவில்கள் கட்டப்படுவதற்கு முன்பே அவ்விடத்தில் இருக்கும் மரங்களை தான் தல விருட்சம் என்பார்கள். விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயிலின் தல விருட்சம் வன்னி மரமாகும். இந்த மரம் சுமார் 1,700 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது.

image

உயிர் தந்து காக்கப்பட்ட வன்னி மரங்கள்:

சிந்து வெளி நாகரீகத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான ராஜஸ்தானில் வன்னி மரங்கள் போற்றப்படுகின்றன. 1730ம் ஆண்டில் மகாராஜா அபய்சிங்க் என்பவர் வன்னி மரங்களை அழித்து அரண்மனை கட்ட முயன்றார். இதனை தடுக்க நடந்த முயன்ற நடந்த போராட்டத்தில் 363 ராஜஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர். இறுதியில் வன்னி மரங்கள் காப்பாற்றப்பட்டன.

நீண்ட வரலாறும், பல்வேறு சிறப்புகளும் கொண்ட வன்னி மரத்தின் புகழை கருத்தில் கொண்டு, கடந்த 1988-ம் ஆண்டு வன்னி மரத்திற்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments