7 வழக்குகளை திரும்பப் பெறக் கோரிய மனுவை திரும்ப பெற்றது கிறிஸ்டி நிறுவனம்
வருமான வரி சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக்கோரி தாக்கல் செய்த மனுவை, கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் நிறுவனம் வாபஸ் பெற்றதால் அம்மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு முட்டை, எண்ணெய், பருப்பு போன்றவற்றை சப்ளை செய்யும் கிறிஸ்டி ஃப்ரைட்கிராம்ஸ் நிறுவனத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில், வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சோதனைகளை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களை தனக்கு எதிராக பயன்படுத்த தடை விதிக்க கோரியும் கிறிஸ்டி நிறுவன அதிபர் குமாரசாமி தரப்பில் ஏழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதிகள் பார்த்திபன், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவின் படி தங்கள் நிறுவனம் சார்பில் டெபாசிட் செய்த 213 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயை மட்டும் பிடித்தம் செய்து மீதமுள்ள 163 கோடி ரூபாயை திரும்ப வழங்கினால் மட்டுமே ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க முடியும் என கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்தது.
மேலும் தங்கள் நிறுவனம் மீது மேற்கொண்டு புதிய வழக்குகள் பதிவு செய்யப்படாது என உறுதி அளித்தால், வருமான வரித்துறை மீது தங்கள் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று கொள்வதாகவும் உறுதியளித்தது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த வருமான வரித் துறை தரப்பு வழக்கறிஞர், கிறிஸ்டி நிறுவனம், 2,056 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் வருமான வரிக் கணக்கு மதிப்பீடு செய்து இறுதி முடிவெடுக்கும் வரை, சொத்துக்களை முடக்கி வைக்க வருமான வரித் துறைக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த ஏழு வழக்குகளையும் திரும்பப் பெற அனுமதி கோரிய மனுவை, கிறிஸ்டி நிறுவனம் தரப்பு திரும்பப் பெற்றதால், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments