குழந்தைகள் விற்பனை: 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
திருச்சி மாவட்டத்தில் இரண்டு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை குழந்தைகள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூரைச் சேர்ந்த கோவிந்தன் - அஸ்வினி தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவர்கள் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையை வளர்த்து வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் இடைத்தரகர் மூலம் பெட்டவாய்த்தலையை அடுத்த காமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவரிடம் 3 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை சட்டவிரோதமாக வாங்கியது தெரியவந்தது. குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், தற்போதைய நிலையில் அஸ்வினியை மட்டும் கைது செய்துள்ளனர்.
அதே போன்று திருச்சி - கல்லணை சாலை சர்க்கார் பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் - ராணி தம்பதியின் ஆண் குழந்தையை உப்பிலியாபுரத்தைச் சேர்ந்த குமார் - சாரதா தம்பதியினர் வளர்த்து வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து குழந்தையை சட்டவிரோதமாக வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை விற்ற மற்றும் வாங்கிய தர்மராஜ், ராணி, குமார், சாரதா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இடைத் தரகர்களாக செயல்பட்ட பூங்கொடி, லூர்து மேரி, வேலம்மாள் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments