3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி... நியுசிலாந்து வெற்றி பெற 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்த் அணிக்கு 297 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
மவுன்ட் மெளன்கனோய் (Mount Maunganui) பகுதியில் நடைபெறும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்த் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, புதுமுக வீரர் மயங்க் அகர்வாலை 1 ரன்னிலும், கேப்டன் விராட் கோலியை 9 ரன்னிலும் ஆட்டமிழக்க செய்து நியூசிலாந்த் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர்.
3ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடியது. சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா, 42 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தநிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பின்னர் 4ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஸ்ரேயாஸ் அய்யரும், கே.எல். ராகுலும் பொறுப்பை உணர்ந்து விளையாடினர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில், மணிஷ் பாண்டேயுடன் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல், ஒருநாள் போட்டி அரங்கில் தமது 4ஆவது சதத்தை பதிவு செய்தார்.
112 ரன்களில் கே.எல். ராகுலும், அவரைத் தொடர்ந்து 42 ரன்களில் மணிஷ் பாண்டேயும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்காமல் பந்துகளை வீணடித்ததால், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்களை மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இதன்பின்னர் 297 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்த் அணி பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர் கப்தில், நிகோல்ஸ் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட்டது. இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தபடி இருந்தனர். அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் அடித்த கப்தில், 66 ரன்களை எடுத்திருந்த நிலையில் சாகல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பொறுப்பாக விளையாடி நிகோல்ஸும் அரைசதம் கடந்தார்.
Comments