Polimer News
சற்றுமுன் தமிழ்நாடு

வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவா?

வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பத்தில் உள்ள சிமெண்ட் குடோனில் இருந்து கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக, கடந்த ஒன்றாம் தேதி வருமான வரித்துறை தெரிவித்தது. அந்த ரூபாய் நோட்டு பண்டல்கள் மீது வார்டுகளின் பெயர்கள் அச்சிடப்பட்டு இருந்தன.

இதைத் தொடர்ந்து வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர்கள் சிலருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வேலூர் மாநகர திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், சிமெண்ட் குடோனுக்குச் சொந்தக்காரரான தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

லஞ்சம் கொடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் சீனிவாசன் மற்றும் தாமோதரன் மீதும், தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவின் கீழ் கதிர் ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வருமான வரித்துறை சோதனையில் பல கோடி ரூபாய் பணம் சிக்கியதால் வேலூரில் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் பரவியது.

ஆனால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவையும் இதுவரை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை என்று, தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷெய்ப்பாலி சரண் (Sheyphali Sharan) தெரிவித்துள்ளார்.

எந்த தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்யவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வருமான வரித்துறை சோதனையில் 11 கோடியே 63 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் அத்தொகுதி தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்ததாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சோதனையில் என்ன பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது எனவும் எந்த தொகுதி தேர்தலையும் ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை என்றும் அது குறித்து முடிவெடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான் எனவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related posts

Polimer News