Polimer News
சற்றுமுன் முக்கிய செய்தி

மாணவி கொடூரக் கொலை உறவினர் கைது

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை போலீசார் கைது செய்தனர். பெண் கொடுக்காத ஆத்திரத்தில் மாணவியை அவன் காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் கல்லூரி ஒன்றில் கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவி ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர். அவர் கல்லூரி விடுதியில் தங்கி படிந்து வந்தார்.

தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை என்பதால் விடுமுறையை கழிப்பதற்காக, வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டுக்கு வருகிறேன் என்று செல்போனில் தகவல் தெரிவித்த மகள் வராததால் தவித்து போன பெற்றோர், கல்லூரி விடுதியை தொடர்பு கொண்டு விசாரித்தனர். மாணவி புறப்பட்டு சென்று நீண்ட நேரமானது உறுதியானது.

இதையடுத்து கோவை விரைந்து வந்த பெற்றோர் தங்கள் மகள் மாயமானதாக கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மாணவியை தேடிவந்த நிலையில் பொள்ளாச்சி – தாராபுரம் சாலையில் பூசாரிப்பட்டி பகுதியில் சாலையோர முட்புதரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் தெரிவித்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்ட போது, அந்த வழியாக கேரளாவுக்கு சென்ற ஒரு பெண் சடலத்தை பார்த்து கதறி அழுததோடு, கொல்லப்பட்டவர் தனக்கு நன்கு தெரிந்த பக்கத்து வீட்டு கல்லூரி மாணவி என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாயமான மாணவி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது பெற்றோரும், சக கல்லூரி மாணவிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட மாணவிக்கு தான் விரும்பிய நபருடன் ஜூன் 13ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்காக பெற்றோர் உறவினர் வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் தான் இந்த சம்பவம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பொள்ளாச்சி, கோவை, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அவரிடம் இறுதியாக செல்போனில் பேசிய நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த நபரை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், மாணவியின் உடல் கிடந்த இடத்திற்கு அருகே 20 அடி தொலைவில் மாணவி பயன்படுத்திய செல்போன் மீட்கப்பட்டது. அந்த செல்போன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆவாரம்பாளையத்தில் மாணவியை மர்மநபர் பின் தொடர்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டன.

இதையும் ஆராய்ந்த போலீசார், நேற்று சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கப்பட்ட நபர் தான் அது என்பதை உறுதி செய்தனர். இதை அடுத்து ஒட்டன்சத்திரத்தில் வைத்து சதீஷ் குமார் என்ற அந்த நபரை போலீசார் சுற்றிவளைத்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர். அவன், மாணவியின் உறவினர் என்றும், ஏற்கெனவே திருமணமானவன் எனவும் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மாணவியை பெண் கேட்டுச் சென்றதாகவும் அப்போது திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தான் விரும்பிய பெண்ணுக்கு திருமணம் என்ற தகவல் அறிந்து ஆத்திரமுற்ற அவன், மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்துக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவன், மாணவியின் மணிக்கட்டு, கை விரல்களை உடைத்துள்ளதாகவும், கழுத்து, தோள்பட்டை, மார்பு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. தொடர்ந்து சதீஷ்குமாரை கோமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் என கூறப்படுகிறது. இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

Polimer News