Polimer News
அரசியல்

வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

பெரம்பலூர்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் முசிறியில் உள்ள உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூஉர், ஆணைப்பட்டி, வடுகப்பட்டி, புதிய பேருந்து நிலையம், ஆலமரத்துப்பட்டி, மலையப்பபுரம், கைகாட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரித்தார்.

கரூர்

கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம், புலியூர், உப்பிடமங்கலம், தரகம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வாக்கு சேகரித்தார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சென்று கரூரின் சின்னாண்டான் கோவில், பாண்டியன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென் சென்னை

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விருகம்பாக்கம், கே.கே.நகர், உள்ளிட்ட இடங்களில் செண்டை மேளங்கள் முழங்க வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கப் பாண்டியன் தீவிர இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விருகம்பாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்குச் சேகரித்தார். நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் அவருடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செயும் அவர் சோழிங்கநல்லூரில் நிறைவு செய்கிறார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தியாகராயநகர் பனகல் பூங்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களை எழுப்பி வாக்குச் சேகரித்தார். முதலில் பிரச்சாரத்துக்கு வரும்போதே நேராகத் சாலையோரக் குளிர்பானக் கடைக்குச் சென்றார். அதனைத் தொடர்ந்து பூங்காவுக்குள் சென்று அவர் வாக்குச் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெங்கும் மக்கள் சிரித்தவாறே வரவேற்பளிப்பதாக பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

வடசென்னை

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி புதுவண்ணாரப்பேட்டையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து வாக்குச் சேகரித்தார். இறகுப் பந்து மைதானத்துக்குச் சென்று விளையாடிய அவர், பின்னர் அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் வாக்குச் சேகரித்தார்.அதனைத் தொடர்ந்து கூடைப்பந்து மைதானத்துக்கும், உடற்பயிற்சிக் கூடத்துக்கும், யோகாசனம் செய்தவர்களிடமும் சென்று கலாநிதி வீராசாமி வாக்குச் சேகரித்தார்.

நெல்லை

நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை மேள தாளங்களுடன் சமத்துவ மக்கள் கட்சியினர் வரவேற்றனர். மத்தியில் வலுவான ஆட்சி அமைய அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஸ்ரீவைகுண்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த அவர், தமிழ்மொழியை காப்பாற்ற போராட வேண்டிய போர்க்களமாக நினைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

அரக்கோணம்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டையில் உள்ள மத்திய தொழில்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவன ஊழியர்களிடம் கைகுலுக்கி வாக்கு சேகரித்தார்.

மத்திய சென்னை

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சென்னை அண்ணாநகரில் தி.மு.க. சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் தலைமையில் அண்ணா நகர், என்.எஸ்.கே. நகர், அரும்பாக்கம், அமைந்தகரை வழியாக பேரணி நடைபெற்றது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்க இரு சக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டதாக வெற்றியழகன் தெரிவித்தார்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்க சாலையில் திறந்த வாகனத்தில் இறுதிக் கட்டப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தென்தாமரைக்குளம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக தொடர்ந்து பணம் கொடுத்து வருகிறது என தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோவை

கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் கோவை புலியகுளம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கோவை இடையர்பாளையத்தில் தி.மு.க. சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் சென்று பிரச்சாரம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான், கொத்தம்பட்டி, சீலப்பாடி போலீஸ் காலனி, என்.ஜி.ஒ காலனி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நூதன முறையில் எல்லாம் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் நிலையில், இன்று தனது காலை உணவை சாலை ஓர கடையில் அமர்ந்து அருந்தினார்.

புதுச்சேரி

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இருசக்கர வாகன பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.மேலும், ராஜ்பவன், முத்தியால்பேட்டை , லாஸ்பேட்டை , தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஹெல்மெட்அணியாமல் சென்ற இளைஞர்களுக்கு எல்லாம் அறிவுரை வழங்கிய முதலமைச்சர் நாராயணசாமி, இன்று ஹெல்மெட் அணியாமல் வாகன பிரச்சாரம் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சிவா , கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் அமைச்சர் விசுவநாதன் உள்ளிட்டோர் தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தனர்.

புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

அதிமுக கூட்டணி சார்பாக புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து ரங்கசாமி , அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் தட்டாஞ்சாவடி , கதிர்காமம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வேலூர்

தகுதிநீக்கம் செய்யபட்ட 18 MLA-க்களில் ஒருவரான ஜெயந்தி பத்மநாபன் தற்போது அதே குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஆம்பூர் அருகே இராமசந்திராபுரத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதி மக்கள் அவரை ஊருக்குள் விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு திருப்பி அணுப்பினர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் வாலாஜாபாத்தை அடுத்த குருவி மலை, களக்காட்டூர், ஆற்பாக்கம், அங்கம்பாக்கம், ஆசுர் உள்ளிட்ட இடங்களில் கூட்டணிக் கட்சியினருடன் திறந்த வாகனத்தில் சென்று இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திறந்த வாகனத்தில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் கடலூர் பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து தற்போதைய கடலூர் எம்பி அருண்மொழித்தேவன் மற்றும் அதிமுக மாநில செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

வடசென்னையில் டி.டி.வி. தினகரன் இறுதிக்கட்ட பிரச்சார்ம்

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சந்தான கிருஷ்ணனை ஆதரித்து கொளத்தூர், திரு.வி.க. நகர், பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் டி.டி.வி.தினகரன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சிலம்பாட்டம், பெண்களின் ஆட்ட பாட்டங்களும் நடைபெற்றன.

அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இறுதிக்கட்ட பிரச்சாரம்

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் உடன் சென்று வாக்குச் சேகரித்தார்.

பாரிவேந்தரை ஆதரித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பிரச்சாரம்

தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு கல்வி கட்டண விலக்கு அளித்தவர் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறினார். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், இவ்வாறு கூறினார்.

பிரச்சாரத்தில் எதிர் எதிரே சந்தித்துக்கொண்ட வேட்பாளர்கள் 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக, திமுக கூட்டணி கட்சியினர் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்ட நிலையில், புன்னகையோடு ஒருவரை ஒருவர் கடந்து சென்றனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷும் திமுக வேட்பாளர் கௌதம சிகாமணியும் ஆத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வ.உ.சி நகர் அருகே இருதரப்பினரும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டனர்.

அப்பகுதியில் போலீசார் இல்லாத நிலையில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழலாம் என்ற பதற்றம் உருவானது. ஆனால் இருதரப்பு தொண்டர்களுமே தங்கள் கட்சிக் கொடிகளை உயர்த்தி ஆராவாரம் செய்தவாறும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தவாறும் கடந்து சென்றனர். இரு தரப்பிலும் சிலர் சாலையின் நடுவே நின்று போக்குவரத்தையும் சரிசெய்தனர்.

சீர்காழியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தமிழன் சீர்காழியின் பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தருமபுரி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இறுதிக்கட்ட பிரச்சாரம்

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், அரூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோர் மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர் உள்ளிட்ட இடங்களில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரியில் உணவுப்பூங்கா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் உறுதி அளித்தார்.

ஈரோடு அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் இறுதிக்கட்ட பிரச்சாரம்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் சித்தோடு, கனிராவுத்தர் குளம், சூளை, எண் புதூர், ராயபாளையம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் பிரச்சாரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களைக் கொண்டு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என அப்போது அவர் கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரம்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து புதூர் பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள் அனைவரது வீடுகளையும் சென்றடைந்திருப்பதாகக் கூறிய அமைச்சர், அவர்கள் அனைவருமே அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். இத்தனை நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒத்துழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் தங்கமணி இறுதிக்கட்ட பிரச்சாரம்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி குமாரபாளையத்தில் திறந்த வாகனத்தில் சென்று இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் இறுதிக்கட்ட பிரச்சாரம்

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் செங்கோட்டையில் மேளதாளங்களுடன் இறுதிக்கட்டப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அ.ம.மு.க வேட்பாளர் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று பிரச்சாரம்

கோவை நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் அப்பாதுரை, கணபதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அவருடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து சங்கனூர், நல்லாம்பாளையம், உடையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

சிவங்கங்கைத் தொகுதி வேட்பாளர் ஹெச். ராஜா இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா, சிங்கம்புணரி பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாகனத்தில் சென்றும் நடந்து சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

Related posts

Polimer News