வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா பாணியில், திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே, திமுக பிரமுகர் இல்ல மணவிழாவில், நோ சூடு, நோ சொரணை என்று நித்தியானந்தா படத்துடன் பேனர் அச்சிட்டு மணமக்களை வாழ்த்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகனும், நகைச்சுவை நடிகரும் சேர்ந்து திருமணவிழாவுக்கு பேனர் வைத்து அடிக்கும் லூட்டி சுவாரஸ்யமானது. அதே போன்ற ஒரு நிகழ்வு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பல்லவபுரம் என்ற கிராமத்தில் அரங்கேறியுள்ளது.
இவர்கள் தான், தங்களுக்கு சூடும் இல்லை சொரணையும் இல்லை என்று ஒப்புக் கொண்டு நித்தியானந்தாவின் படத்துடன் கைலாசவாசிகள் என பேனர் வைத்த பல்லவபுரம் பாண்டவர்கள்..!
திமுக பிரமுகர் ஒருவரின் மகனின் திருமணவிழாவுக்கு பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்த நிலையில், இந்த கைலாசவாசிகளின் பேனர் கலாட்டாவை பார்த்து பலரும் தலையில் அடித்துக் கொண்டே சென்றனர்.
இந்த பேனரை வைத்தது தாங்கள் தான் என்பது போல பேனருக்கு அருகில் சிரித்த படியே நிற்கும் இவர்கள் அத்தனை பேரின் முகத்திலும் நித்தியின் அதே அந்தப்புர மகிழ்ச்சி தாண்டவமாடியது..!
குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சி அடைந்தவர், யாரை பற்றியும் கவலைபடாதவர், சூடு சொரணை இல்லை என்று கூறுபவர், கைலாசா என்று சொந்த நாட்டை உருவாக்கியவர் என்று நித்தியின் அருமை பெருமைகளை அடுக்கிவிட்டு, ஒரு முறையாவது கைலாசாவுக்கு சென்று விட வேண்டும் என்று ஆசையில் அவரது படத்தை பேனரில் அச்சிட்டதாக தெரிவிக்கின்றனர் இந்த சொரணை இல்லாத பாய்ஸ்..!
மணமக்களை வாழ்த்தி பேனர் வைத்த காலம் போய் ஊரார் தங்களை பற்றி பேச வேண்டும் என்பதற்காக பேனர் வைத்து, தங்களை தாங்களே கலாய்த்துக் கொள்ளும், இந்த கலியுக காமெடியன்கள் தமிழகத்தில் ஊருக்கு நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்..!