மதுரையில், குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியவரிடம் அபராத தொகையைவிட கூடுதலாக 500 ரூபாய் பணம் வசூலித்ததாக தலைமைக் காவலர் மீது புகார் எழுந்துள்ளது.
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து தலைமைக்காவலர் அரிச்சந்திரன் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குடித்துவிட்டு இருசக்கரவாகனம் ஓட்டி வந்த ஒருவரிடம், அபராத தொகையான 10 ஆயிரம் ரூபாயுடன்,கூடுதலாக 500 ரூபாய் கேட்டு தலைமைக்காவலர் அரிச்சந்திரன் அடாவடியாக பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. பணம் கேட்டு பேரம் பேசியதாக கூறப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள மதுரை காவல் ஆணையர் டேவிட் தேவ ஆசீர்வாதம், சம்பந்தப்பட்ட காவலர் மீது விசாரணை நடத்தி, அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.