விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆடு மேய்க்கச் சென்று மாயமான 9 வயது சிறுமி, 2 நாட்களுக்குப் பின் அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி - ராஜலட்சுமி தம்பதியின் மகள் வசந்த குருலட்சுமி, கடந்த சனிக்கிழமை மாலை தங்கையோடு ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்குச் செல்வதாக தங்கையிடம் கூறிவிட்டுச் சென்றரை நீண்ட நேரமாகியும் காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர்.
தொடர்ந்து காவல்துறைக்கும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வந்து தேடியுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் அங்குள்ள கிணற்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.