பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வு பெறுவதால் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அந்நிறுவன சென்னை தலைமை பொது மேலாளர் சந்தோஷம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். இதுகுறித்து பேசிய சந்தோஷம், 78,565 பேர் இன்று விருப்ப ஓய்வு பெறுவதாகவும், இதில் சென்னை வட்டத்தில் மட்டும் 2,699 பேர் விருப்ப ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் 40 எக்ஸ்சேஞ்ச் அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் சேவையை பாதிப்பு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். புதிய இணைப்பு பெற வழக்கமான முறையில் பதிவு செய்யலாம், அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சந்தோஷம் தெரிவித்தார்.